யாழ்ப்பாணம், கைட்ஸ் பொலிஸ் பிரிவில் அலபிட்டி சந்திக்கு அருகாமையில் இன்று (10) காலை, பொலிஸாரின் கட்டளைக்கு அடிபணியாமல் வேகமாகச் சென்ற வேனுக்கு பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர்.
அதனால் 17 வயதுடைய இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.அலப்பிட்டி சந்தியில் சந்தேகத்திற்கிடமான வேனை நிறுத்துமாறு பொலிஸார் சமிக்ஞை செய்தும் அதனைக் கருத்திற் கொள்ளாமல் வாகனம் மண்டைதீவு பிரதேசத்திற்கு வேகமாகச் சென்றுள்ளது.
இது தொடர்பில் அவசரமாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, கைட்ஸ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பயணம் செய்த ஜீப் வண்டிக்கு அறிவித்ததைத் தொடர்ந்து, அந்த ஜீப் வண்டியில் இருந்த பொலிஸார் பலமுறை அந்த வேனை நிறுத்துமாறு கோரியும், அதனைக் கருத்திற் கொள்ளாமல் அந்த வண்டி சென்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.
பொலிஸார் வாகனத்தை நிறுத்துவதற்காக முதலில் ஆகாயத்திற்கு துப்பாக்கிச் சூடு நடாத்தியுள்ளனர். அதற்கும் செவிசாய்க்காததனாலேயே, அந்த வாகனத்திற்கு சூடு நடாத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த சாரதி, யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதன் பின்னர் அங்கு மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயது நபர் என தெரியவந்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான வாகனத்தில் மேலும் இருவர் பயணம் செய்த நபர்களையும் பொலிஸார் கைது செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணைகளின் போது, குறித்த வாகனத்தின் பின்புற இலக்கத் தகடும் கழற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், கைட்ஸ் பொலிஸார் மற்றும் யாழ்ப்பாணப் பிரிவின் குற்றவியல் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக