ஒரு அரசறிவியல் மாணவனாகவும், 35 வருடங்களுக்கும் மேலான சமூக-அரசியல் அனுபவங்களைக் கொண்டவன் என்ற ரீதியிலும், இந்தப் படம் தற்போதைய முஸ்லிம் மார்க்கத் தலைமைகளின் முதிர்ச்சியற்ற நிலைப்பாட்டையே எனக்குப் புலப்படுத்துகிறது.
தற்போதைய அரசாங்கம், அதன் ஆட்சியியல் தத்துவம், ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் நகர்வுகள் என்பவற்றைச் சரியாகப் புரிந்துகொள்வதில் உள்ள பலவீனத்தை இங்கே அவதானிக்க முடிகிறது.
இது எமது சிறுபான்மைச் சமூகத்தின், குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் அரசியல் உளவியலில் உள்ள பாரிய சிக்கலாகும். கொள்கை, கோட்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தின் அடிப்படையில் இயங்க வேண்டிய ஒரு சமூகம், இன்றைய மாற்றங்களைக் கண்டு திகைத்துப் போய் நிற்கிறது என்பதற்கு இந்தப் படம் ஒரு சிறந்த உதாரணம்.
இந்தச் செயற்பாட்டின் மூலம் நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள்?
- நாங்கள் எல்லோருடனும் இணங்கிச் செல்பவர்கள் என்றா?
- அல்லது நாங்கள் யாருக்கும் எதிரிகள் இல்லை என்றா?
- தேசிய மக்கள் சக்தியின் (NPP) பின்னால் அணிதிரண்டு, தேர்தல் வாய்ப்பு கிடைக்காத விரக்தியில், குறைந்தபட்சம் பதவிகளையாவது தாருங்கள் என்று பேரம் பேசுகிறீர்களா?
- அதுவும் கிடைக்காத பட்சத்தில், "நாங்கள் இப்படித்தான் செய்வோம்" என எச்சரிக்கை விடுக்கிறீர்களா?
ஒன்றை மட்டும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த காலங்களில் அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு, நெருக்கடியான காலகட்டங்களில் நீங்கள் செய்த காய்நகர்த்தல்களை இந்தச் சமூகம் மறக்கவில்லை; வெறுமனே சகித்துக்கொண்டிருக்கிறது, அவ்வளவுதான்.
கடந்த காலங்களில் அரசியலை ஒரு சமூக அந்தஸ்தாகவும், பொருளீட்டும் கருவியாகவும், தனிப்பட்ட அல்லது குழு சார்ந்த நலன்களுக்காகவும் பயன்படுத்தியவர்களுக்கு, தற்போதைய புதிய அரசியல் செல்நெறி சமிபாடடையாது என்பதுதான் கசப்பான உண்மை.
முடிவாக: காலத்தையும், சூழலையும், மாற்றத்தையும் சரியாகக் கணித்து (குறிப்பறிந்து) செயற்பட வேண்டிய தருணம் இது.
- பஸ்லி ராஸிக்
நாட்டு நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக