St Our Ceylon News: நான் தான் அமைச்சர் என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது!
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 24 மார்ச், 2019

நான் தான் அமைச்சர் என்னை தவிர வேறு யாரும் வீடுகளை கட்ட முடியாது!

600 வீடுகள் கிடைத்திருப்பதாக தம்பட்டம் அது அப்பட்டமான பொய் என்கிறார் அமைச்சர் திகாம்பரம்

பாராளுமன்றத்தில் கறுப்பாகவும், கண்ணு சிவந்த நிலையில் தூங்கிக் கொண்டிருக்கும் ஒருவர் அமைச்சர் சஜித் பிரமேதாஸவிடம் சென்று 600 வீடுகளுக்கு கடன் விண்ணப்பங்களை கேட்டுள்ளார் என தெரிவிக்கும் அமைச்சர் பழனி திகாம்பரம் இவ்வாறான விண்ணப்பங்கள் எனக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன்,
இராதாகிருஷ்ணன், திலகராஜ் ஆகியோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதை வைத்துக் கொண்டு தோட்டம் தோட்டமாகவும், வீடு, வீடாகவும் சென்று இந்த அரசு தனக்கு 600 வீடுகள் கொடுத்துவிட்டது என்று தம்பட்டம் அடிக்கின்றனர்.
மலையகத்தில் வீடமைப்பு செய்வதற்கு நானே அமைச்சர் இந்த அதிகாரத்தை அரசாங்கம் எனக்கு தான் கொடுத்துள்ளது. இந்த நிலையில் இவர்களை வீடு கட்ட நான் இடம் கொடுப்பேனா என கேள்வியும் எழுப்பினார்.
இந்திய அரசாங்கத்தால்  கொத்மலை எல்பொட தோட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் (24.03.2019) அன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் கேள்வி எழுப்பினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
மலையகத்தில் நான் நினைத்தால் மாத்திரமே வீடுகளை கட்டலாம். 2015ம் ஆண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மலையகத்தில் வீடு அமைப்பதற்காக மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சை எனக்கு பாரம் கொடுத்துள்ளார்.
இப்போது ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் மக்கள் எங்களை தேடி வரும் இந்த நிலையில் நாம் முன்னெடுக்கும் அபிவிருத்தியை நிறுத்த பொய்யான தகவலாக 600 வீடுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து சிலர் வலம் வருகின்றனர்.
இவ்வளவு நாள் செய்யாத அரசா இப்போது இவர்களுக்கு செய்ய போகின்றது என்ற கேள்வியும் எழுப்பினார். அதேநேரத்தில் இந்த வருடம் 3000 வீடுகள் எனக்கு கட்டியமைக்க வழங்கப்பட்டுள்ளது.
ஆகையால் யாரும் பயப்பட வேண்டாம். தாத்தா சொன்ன பொய் போதும், அப்பா சொன்ன பொய் போதும், இப்போது பேரன் பொய் சொல்லி, கொள்ளுபேரனும் பொய் சொல்ல வந்துவிட்டார்.
இதற்கு இடம் கொடுக்க வேண்டாம். நான் இருக்கும் வரை எவருக்கும் பயப்படவும் வேண்டாம். நான் யாருக்கும் பயந்து போகும் ஆல் கிடையாது. உங்களுக்காக உங்களுக்குள்ள பிரச்சினையை எதிர்த்து போராடி உங்களுக்கு துரோகம் செய்யும் தலைவர்களை விரட்டியடிக்கவும் தயங்க மாட்டேன்.
நாம் பொறுமை சாய்த்தது போதும், எதிர்காலத்தில் நமது சந்ததினருக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து செல்ல வேண்டும். இதை தெரிந்துக் கொண்டு இன்று மக்கள் மாற்றம் அடைந்து வரும் போது மீண்டும் ஒரு பொய்யை சொல்லி 1000 வீடுகள் வந்துள்ளது என சொல்லி திரிகின்றார்கள்.
இந்த 1000 வீட்டில் ஒரு வீட்டைக் கூட இங்கு கட்டியமைக்க முடியாது. அரசு எனக்கு தான் மலையகத்தில் வீடுகளை அமைக்க பொறுப்பு கொடுத்துள்ளது.
அதிகார சபையும் எனக்கு கீழே தான் உள்ளது. நாமே வீடுகளை கட்டுவோம். நாம் இந்த அமைச்ரச பெற்றே பின்பே மலையகத்தில் கிராமங்கள் உருவாகி வருகின்றது. வேறு யாராவது வந்திருந்தால் மலையகத்திற்கு மாடி வீடுகளே கிடைத்திருக்கும்.
கூட்டணி சார்பாக சேவைகளை செய்து வருகின்றோம். ஆதரவு தாருங்கள் மலையகத்தில் லயன்களை உடைத்து தனி வீடுகளை அமைத்து கிராமங்களை உருவாக்குவோம். இந்திய அரசு வீடு கட்டும் நிதியை நன் கொடையாகவே கொடுக்கின்றது.
ஒரு வீட்டிற்கு 10 இலட்சம் ரூபா செலவு செய்யப்படுகின்றது. 16,000 வீடுகள் இந்திய அரசு வழங்கியுள்ளது. 4000 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஜீன், ஜீலையில் 10000 வீடுகளுக்கான அடிக்கல் நாட்ட உள்ளோம்.
லயன் வீடுகளை உடைத்து தனி வீடுகளை அமைப்பது எமது அமைச்சும் அரசுக்கு முன்வைத்துள்ள கோரிக்கையாகவும் இருக்கின்றது. அந்த வகையில் இந்திய அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
அத்துடன், தோட்ட பகுதிகளுக்கு தனி முகவரி தந்த இலங்கை அரசுக்கும் பிரதமருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
(க.கிஷாந்தன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக