St Our Ceylon News: சுவர்க்கத்தில் உனைக்காண ஆசை! -அஷ்ரஃப் சிஹாப்தீன்-
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

ஞாயிறு, 3 ஜூன், 2018

சுவர்க்கத்தில் உனைக்காண ஆசை! -அஷ்ரஃப் சிஹாப்தீன்-

நெஞ்சமெலாம் பதறுதடி மகளே
நெடு துயிலுக் குனையாக்கி விட்டார்
அஞ்சாமல் நொந்தோர்க்கு உதவும்
அருமந்த மகளுன்னைக் கொன்றார்
வஞ்சகர்க்குத் தர்மமிலை என்னும்
வார்த்தையினை மீளெழுதிச் செல்வோர்
எஞ்சார்கள் என்பதனை மட்டும்
எதிர்கால வரலாறு பேசும்!
ஆயுதத்தில் அதிகாரம் வைத்து
ஆடியவர் கதைகளினை அறிவாய்
பேயுலவும் காடுகளைப் போலிப்
பெரு நிலத்தை ஆளவந்தோர் அழிந்தார்

தாயுமென ஆனமகள் உன்னைத்
தரையினிவே வீழ்த்தி மகிழ்ந்திட்ட
நாயுமென அலைகின்ற கூட்டம்
நாசமுறும் நாளொன்றைக் காண்போம்
என்நெஞ்சு தீய்கிறது மகளே
எத்தனை நாள் துயரிலே துவள்வோம்
பொன் பொருளை விடப் பெரிய செல்வப்
பிள்ளைகளை இழப்பதுவே விதியா
உன்னைப்போல் ஆயிரம்பேர் எழுவர்
உள்ளதொரு ஆறுதல்தான் மீதம்
முன்னாலே முகங்காணா போதும்
சுவர்க்கத்தில் உனைக்காண ஆசை!
(காஸா எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவத் தாதி ரஸான் நஜ்ஜாருக்கு..)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக