St Our Ceylon News: 'வன்னிகுறோஸ் மகளிர் பேரவை' ஆண்டுவிழா.
🔴 முக்கிய செய்திகள்:
Loading latest news...
🌙 Toggle Mode
💡 Powered by ChatGPT & Kalaimahan | © 2025 Our Ceylon News

சனி, 28 ஏப்ரல், 2018

'வன்னிகுறோஸ் மகளிர் பேரவை' ஆண்டுவிழா.

பெண்களின் நிறைந்த சங்கமம் ஒன்றினை வன்னியில் காணக்கிடைத்தது. ஈழத்தின் வன்னியின் புதுக்குடியிருப்பிலே இச்சங்கமம். வன்னிகுறோஸ் மகளிர் பேரவையின் முல்லை மாவட்ட அணியினரின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவானது 28.04.2018 சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் ஆரம்பமானது.

முன்னதாக யாழ்.முத்துலட்சுமி சகோதரிகளின் நாதஸ்வர இசையுடன் அதிதிகளும், பெண்களும் விழா மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர். நிகழ்வுக்கு வன்னிகுறோஸ் மகளிர் பேரவையின் முல்லைத்தீவு மாவட்ட தலைவர் சு.வளர்மதி தலைமை வகித்தார்.
பொதுச்சுடரினை மாவீரரின் தாயார் ருக்மணிதேவி பிரகாசலிங்கம் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து வரவேற்பு நடனத்தினை கற்சிலைமடு இளங்கலைஞர் மன்ற மாணவிகள் வழங்கினர். வரவேற்புரையினை வன்னிகுறோஸ் கலாசாரப்பேரவை முல்லை மாவட்ட செயலாளர் சி.வேதவனம் வழங்கினார். தலைமையுரையினைத் தொடர்ந்து மகளிர் பேரவையின் செயற்பாட்டுரையினை வன்னிகுறோஸ் கலாசாரப் பேரவையின் தலைவர் சி.நாகேந்திரராசா ஆற்றினார்.
நிகழ்வில் பெண்கள் சார்ந்த ஆரம்ப உரையினை வடக்கு மாகாண ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப் பிரிவு பணிப்பாளர் ஜெயா தம்பையா நிகழ்த்தினார். தொடர்ந்து 'வன்னி முரசம்' பத்திரிகை வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வின் வெளியீட்டுரையினை யோ.புரட்சி நிகழ்த்தி வெளியீட்டு நிகழ்வை நடாத்தினார். பத்திரிகையை நிகழ்வின் இணை பிரதம விருந்தினர் வன்னிகுறோஸ் சுகாதார நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் வெளியிட்டு வைக்க, நிகழ்வின் பிரதம விருந்தினர் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பெற்றுக்கொண்டார். தொடர்ந்து யாவர்க்கும் பத்திரிகையின் பிரதிகள் வழங்கப்பட்டன. கார்த்திகைப்பூ மற்றும் முரசு ஆகியவை கொண்டதாக பத்திரிகையின் சின்னம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் வன்னிகுறோஸ் மகளிர் குழுக்கள் நாற்பதிற்கு குழுவிற்கு இருபத்து ஐயாயிரம் வீதம் ஊக்குவிப்பு நிதி வழங்கப்பட்டது. இந்திதி உள்ளூர் சமூக நலன்விரும்பிகளால் வழங்கப்பட்டது. இதில் அதிக நிதியாக ஏழரை இலட்சங்கள் வரையான நிதியினை முப்பது மகளிர் குழுக்களுக்காக ஒட்டுசுட்டான் பண்டாரவன்னியன் அறங்காவற் கழகத் தலைவர் இ.சந்திரரூபன் வழங்கியிருந்தார்.
மகளிர் மேம்பாடு, அபிவிருத்தி சார்ந்த உரைகளை, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன நிர்வாகி மிதிலைச்செல்வி பத்மநாதன், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், வன்னிகுறோஸ் மகளிர் பேரவை ஆலோசகரும், பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருமான மதினி நெல்சன், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி ஆகியோரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியகலாநிதி சி.சிவமோகன், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோரும் நிகழ்த்தினர்.
நிகழ்வில் யாழ்ப்பாணம் முத்துலட்சுமி சகோதரிகளின் நாதஸ்வர கச்சேரி, கற்சிலைமடு இளங்கலைஞர் மன்றத்தினரின் நடனக்காட்சி ஆகியவையும் இடம்பெற்றன.
நன்றியுரையினை சி.வேதவனம் ஆற்றினார். மதிய போசனத்துடன் நிகழ்வு நிறைவுபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லாப் பிரதேசங்களைச் சேர்ந்த மகளிரும் கலந்துகொண்ட இந்நிகழ்வானது மகளிரின் அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு இன்னொரு படிக்கல்லாக அமையப்பெறும் எனலாம்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக